தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை
23 Oct,2024
தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து புதன்கிழமை காலை 389 விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றன. மீனவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரண்டு விசைப்படகுகளையும், அதிலிருந்த 16 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது புதன்கிழமை மாலை கைது செய்தனர்.
புதன்கிழமை இரவு இரண்டு விசைப்படகுகளும், 16 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின்னர் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 61 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து, 450 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.