இந்தியாவில் ஒரே நாளில் 20+ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - நடந்தது என்ன?
19 Oct,2024
இன்று (அக்.19) காலை முதல் பல்வேறு இந்திய விமான நிறுவனங்களின் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து மும்பை வழியாக இஸ்தான்புல் செல்லும் இண்டிகோ விமானத்துக்கும், ஜோத்பூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் மற்றொரு இண்டிகோ விமானத்துக்கும், உதய்பூரில் இருந்து மும்பைக்குச் செல்லும் விஸ்தாரா விமானத்துக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இண்டிகோ தனித்தனியாக இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில், "புதுடெல்லியில் இருந்து மும்பை வழியாக இஸ்தான்புல் செல்ல இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அறிந்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு அவர்களின் வழிகாட்டுதல்களின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எங்கள் நிறுவனம் எடுத்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அறிக்கையில், "ஜோத்பூரிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் விமானம் 6E 184, பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையைப் பெற்றுள்ளது. விமானம் டெல்லியில் தரையிறங்கியது. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிவிட்டனர். பாதுகாப்பு நிறுவனங்களின் நடைமுறைகளோடு நாங்கள் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம்" என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உதய்பூரிலிருந்து மும்பை செல்லும் யுகே 624 விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு வெடிகுண்டு மிரட்டலை பெற்றது. மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், கட்டாய சோதனைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டது" என தெரிவித்துள்ளது.
இன்று (அக்.19) காலை முதல் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (அக்.18) விஸ்தாராவின் மூன்று சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அது புரளி என்பது உறுதியாகியது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு விமானம் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது.
கடந்த சில நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.