60 ஆண்டுகளில் 2393 பேர் உயிரிழப்பு; பயணிகள் உயிரை அலட்சியமாக நினைக்கும் ரயில்வே துறை
இந்தியாவில் கடந்த 1964ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ரயில் விபத்தில் மட்டும் ரயில்வே நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் 2393 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரயில்வே துறை சமீபகாலமாக விபத்துகள் என்பது அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், விபத்தில் பாதிக்கப்படுவது பயணிகளின் குடும்பங்களாக தான் உள்ளன.
அந்தவகையில் கடந்த 60 ஆண்டுகளாக நடந்த ரயில் விபத்துகளின் விவரம் பின்வருமாறு:
* 1964ம் ஆண்டு ராமேஸ்வரம் பகுதியில் வீசிய புயலால் பாம்பன் பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் அதன் மீது சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் கடலில் விழுந்து 120 பேர் உயிரிழந்தனர்.
* 1981ம் ஆண்டு பீகாரில் நடந்த ரயில் விபத்து இந்தியாவின் மிகமோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. பாக்மதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 286 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டாலும் 800 பேர் வரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
* 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி : உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.
* 1998ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி : பஞ்சாப்பில் நேரிட்ட விபத்தில் 212 பேர் இறந்தனர். தடம்புரண்டு நின்ற ரயில் மீது விரைவு ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.
* 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி : மேற்கு வங்காளத்தில் பிரம்மபுத்ரா மெயிலும் அவத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 300 பயணிகள் உயிரிழந்தனர்.
* 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம்: பீகார் மாநிலத்தில் தாவே நதி அருகே ஹௌரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் சுமார் 130 பேர் உயிரிழந்ததாக ரயில்வே தெரிவித்தது.
* 2010ம் ஆண்டு மே மாதம் : மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலும் விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.
* 2023ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி : ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கோரமண்டல் விரைவு ரயில், பஹானாகா பஜார் நிலையம் அருகே இரவு 7 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும்அதிகமானோர் காயம் அடைந்தனர்.
* 2023ம் ஆண்டு அக்.29ம் தேதி : ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில், கொத்தவலசா சந்திப்பு ரயில் நிலையம் அருகே, விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மோதியதில், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டது. 14 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
* 2024ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பலரும்காயமடைந்தனர்.
* இந்தநிலையில் நேற்றைய தினம், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்துகுள்ளாகியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.