ஆதாருக்கு விண்ணப்பித்தால் தாசில்தார் ஒப்புதல் தேவை? - அமலுக்கு வரும் புதிய நடைமுறை!
12 Oct,2024
இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை அவசியமானதாக உள்ள நிலையில் ஆதார் அட்டை பெறும் நடைமுறையில் சில மாற்றங்கள் விரைவில் அமலாக உள்ளது.
நாடு முழுவதும் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டைகள் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா சேவைகளுக்கும் அவசியமானதாக மாறியுள்ளது. தேவையான சான்றுகளை சமர்பித்து ஆதார் மையங்கள் மூலம் ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் சமீபமாக தமிழகத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் அட்டைகளை பெற்று தந்ததாக திருப்பூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் இதுபோல போலி சான்றுகள் மூலம் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் பலர் ஆதார் அட்டைகளை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்க புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தால் அவை ஆன்லைன் மூலம் UIDIA ஒருங்கிணைந்த மையத்திற்கு செல்லும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படும்.
சான்றுகளில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் அவை அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ உண்மை தன்மையை நேரடியாக ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் வழங்கப்படும்.
இந்த புதிய நடைமுறை மூலம் வெளிநாட்டு அகதிகள், சட்டவிரோதமாக உள் நுழைபவர்கள் ஆதார் பெறுவது தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.