உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ்
01 Oct,2024
பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், கணக்கெடுக்கவும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மே 7 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
அதன்படி, இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல், இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரம் வாகனங்களும், 7 லட்சத்து 14 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு நேற்று முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிரத்யேக இணையதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.
அதேபோல உதகையிலும் இ-பாஸ் நடைமுறை அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலமாக இ-பாஸ் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.