ஆந்திர மாநிலம் பெஜவாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
ஆயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான காலனிகளையும் மூழ்கடித்த வெள்ளம் முழுமையாக வடிந்தாலும், அதனால் ஏற்பட்ட சேறு இன்னும் குறையவில்லை.
பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்தாலும் சேறு இன்னும் முழுமையாக அகலவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகள் அனைத்தும் அசுத்தமாக காட்சியளிக்கின்றன.
இதனால் நகரின் பல இடங்களில் நோய்கள் பரவி வருகின்றன. பலருக்கும் தொற்று மற்றும் காய்ச்சல் ஏற்படுவது அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் காரணமா?
இம்மாதத்தின் முதல் வாரத்தில் விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்தபோது, என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கையாபேட்டை நகரிலும் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின.
மனித சதையை உண்ணும் பாக்டீரியாவால் இந்த ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் உடலில் காயங்கள் ஏதுமின்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் நுழைந்தது மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏழாம் வகுப்பு படிக்கும் பவ்தீப் என்ற 12 வயது சிறுவனின் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
வெள்ளம் வடியும் வரை குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்தார். வீட்டில் உள்ள பொருட்கள் நனையாமல் இருக்க பெற்றோருக்கு உதவினார்.
“வெள்ளம் வடிந்தபின் ஒருநாள் இரவில் பவ்தீப்பிற்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வழங்கினார், ஊசியும் செலுத்தினார். ஆனால், பவ்தீப்பிற்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகவே, பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, இரு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர் வெளியேறுவது தடைபட்டது. நான் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றேன்” என பிபிசியிடம் சிறுவனின் தந்தை நாகராஜு தெரிவித்தார்.
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இப்பிரச்னை இல்லை என்று நாகராஜு கூறினார்
படக்குறிப்பு, வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இப்பிரச்னை இல்லை என்று நாகராஜு கூறினார்
அந்த மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பவ்தீப் விஜயவாடாவில் உள்ள அங்கூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு அரிதான 'நெக்ரோடைசிங் ஃபேசிடிஸ்' நோய் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
சதை உண்ணும் பாக்டீரியா
இந்த நோயின் மற்றொரு பெயர் சதை உண்ணும் நோய்.
இந்த நோயை ஏற்படுத்திய பாக்டீரியா, பவ்தீப்பின் உடலில் புகுந்து தசைகளை தின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க கடந்த 17-ம் தேதி சிறுவனின் தொடை வரை வலது கால் அகற்றப்பட்டது. இடது முழங்காலுக்கு அடியில் உள்ள திசுக்களில் 30 சதவிகிதத்தை கிருமிகள் உண்டதும் கண்டறியப்பட்டது.
இந்த நோய் பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் பவ்தீப்பின் உடலில் எந்த வித காயமும் இல்லாமல் ஆபத்தான பாக்டீரியா எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நல மருத்துவர்களான வருண் குமார் மற்றும் ரவி ஆகியோர் பிபிசியிடம், பவ்தீப் சாக்கடை நீர் சுற்றியுள்ள பகுதியில் இருந்ததால் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இந்தப் பிரச்னை இல்லை என்றும், வெள்ளம் ஏற்பட்ட பின்னர் தான் பிரச்னை தொடங்கியதாகவும் நாகராஜு கூறினார்.
சிறுவனின் உடலின் பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அவரது உடலில் இ.கோலி (E.coli) மற்றும் கிளெப்சியெல்லா (Klebsiella) கிருமிகள் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் ரவி, வருண்குமார் கூறுகையில், ‘‘இந்த கிருமிகளில் ஆபத்தான வகைகள் உள்ளன. அவற்றால்தான் கால்கள் வீக்கமடைகின்றன” என்றனர்.
"வெள்ள நீரில் கழிவுநீர் கலக்கிறது. அப்போது பாக்டீரியாவின் பரவல் அதிகமாகும். அப்போது உடலில் பாக்டீரியாக்கள் நுழைந்திருக்கலாம். மறுபுறம், பவ்தீப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு ஆன்டிபயாடிக் ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்பட்டது. அவ்வாறு செய்வது ஆபத்தானது,'' என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பவ்தீப்பின் சிகிச்சைக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் சிறுவனின் தந்தை நாகராஜு தெரிவித்தார்.
சிறுவன் குணமடைய இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறுவதாகவும், இதற்கிடையில் ஏற்படும் மருத்துவ செலவுக்கு நன்கொடையாளர்களின் உதவியை நாட உள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜயவாடாவில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
விஜயவாடா நகரில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விஜயவாடா நர்சிங் ஹோம் மற்றும் பாலிகிளீனிக்கின் மருத்துவர் ஹரிஹரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
"விஜயவாடாவில் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் கனமழையால், நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இயற்கையாகவே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்ச்சல் அதிகமாகிறது. ஆனால், இம்முறை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள், குறிப்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மிதமான காய்ச்சல் வந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
விழிப்புணர்வு தேவை
விஜயவாடா அரசு மருத்துவமனை இணைப் பேராசிரியர் மருத்துவர் ஜோதிர்மயி, வெள்ள நீரில் நடந்து செல்லும் போதும், வெள்ளம் வடிந்த பின்னரும் மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் அதிக ஆபத்துள்ள நோயாளிகளாகக் கருதப்படுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தண்ணீர் மற்றும் கழிவுநீரில் நனையாமல் கவனமாக இருக்க வேண்டும்.
காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கவும். சுத்தமான சூடான உணவை உட்கொள்ள வேண்டும்.
"வெள்ளம் வடிந்த பின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தயார் செய்துள்ளோம். ஆனால், அரசு மருத்துவ முகாம்கள் நடத்தி மருந்துகள் வழங்கியதால், பொது மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை" என்றார் ஜோதிர்மயி.
விஜயவாடா நகருடன் என்டிஆர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இம்மாதம் 2-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 2 லட்சத்து 699 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டதாக பிபிசியிடம் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரியான மருத்துவர் சுஹாசினி தெரிவித்தார்.
எங்கு, எப்போது யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் சுகாதாரத் துறை தயாராக இருப்பதாக அவர் கூறினார்.