பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் 2024 போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன. நிறைவு விழா கொண்டாட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 741 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். வழக்கமாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறும். ஆனால் முதன் முறையாக பாரிஸின் முக்கிய அடையாளமாக திகழும் சீன் நதியில் நடத்தப்பட்டது.
நடந்த முடிந்த ஒலிம்பிக்கில் 42 வகையான விளையாட்டுகளும், அவை 329 பிரிவுகளாக போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்தியா தரப்பில் மொத்தம் 16 வகையான விளையாட்டு போட்டிகளுக்கு 112 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். தொடரில் இந்தியா 1 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதேபோன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கரும், சரப்ஜோத் சிங்கும் பங்கேற்றனர். இருவரும் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.
22 வயதாகும் இளம் வீராங்கனை மனு பாக்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் மனு பாக்கர். இதேபோன்று 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 3 ஆவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையையும் ஏற்படுத்தினார் ஸ்வப்னில் குசாலே.
ஒட்டு மொத்தமாக இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் அணி இந்தியாவுக்கு 3 பதக்கங்களை பெற்றுத் தந்தது. இதேபோன்று தங்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி பதக்கத்தை கைப்பற்றியது. இதேபோன்று தங்கம் வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
26 வயதான அவர் தனது இரண்டாவது சுற்றில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்தார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார்.
இதேபோன்று ஆடவருக்கான மல் யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒட்டு மொத்தமாக இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன. இதில் 1 வெள்ளி 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் இந்தியா 71 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகள் அடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.