இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு
26 Jul,2024
இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசின் கீழ் இந்தி மொழி கற்பதற்கு 36 இலங்கை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா நேற்று (25) வியாழக்கிழமை மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில் இறுதியாக இலங்கை மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.
இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் மத உறவுகளை மேம்படுத்துவதில் இந்தி மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆறு மாணவர்களும், சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்திலிருந்து நான்கு மாணவர்களும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், அனுராதபுரத்தில் உள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து நான்கு மாணவர்களும், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு மாணவர்களும், மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்களும், ஜேதவனாராம பௌத்த மடாலயத்திலிருந்து மூன்று மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இந்தி மொழி மற்றும் இலக்கியம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்படக் கிட்டத்தட்ட 100 கல்வி நிறுவனங்களில் இந்திய மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.