கோவை - அபுதாபி இடையேயான நேரடி விமான சேவை ஆகஸ்ட் 10-ல் தொடக்கம்
17 Jul,2024
பல ஆண்டு கால கோரிக்கையைத் தொடர்ந்து கோவை- அபுதாபி இடையே நேரடி விமான சேவை ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கோவையில் இருந்து துபாய்க்கு அல்லது அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என தொழில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து தற்போது இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்த புதிய சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தொடக்கப்படும்.வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இந்த விமான சேவை வழங்கப்படும்.
அபுதாபியில் இருந்து அதிகாலை 12.40 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் காலை 6.25 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல் மீண்டும் கோவையில் இருந்து காலை 7:40 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணியளவில் அபுதாபி சென்றடையும். மொத்தம் 186 பேர் பயணிக்க கூடிய வகையிலான ஏ 320 ரக விமானம் இந்த சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு வழி கட்டணமாக ரூ 10,000 முதல் கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார். கோவை மக்களின் பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி இருப்பதால் தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.