திருமணத்திற்கு பின் மணமகள் மணமகன் வீட்டோடு சென்று வாழும் வழக்கம் இன்று தமிழ்ச் சமூகத்தில் பரவலாக காணப்படும் ஒன்று. ஆனால், தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ஆண்கள் தங்கள் மனைவியின் வீட்டுக்கு சென்று 'வீட்டோடு மாப்பிள்ளையாக' வாழ்கின்றனர். இப்படிப்பட்ட கிராமம் எங்கே இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?
தூத்துக்குடி மாநகரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் சுற்று வட்டார தொலைவில் அமைந்துள்ள சிவகளை, செக்காரக்குடி, புதூர், தளவாய்புரம், பொட்டலூரணி, முடிவைத்தானேந்தல், கூட்டுடன்காடு, செட்டியூரணி, வர்த்தகரெட்டிபட்டி, ஏரல், சொக்கலிங்கபுரம், பணகுளம், பாண்டியபுரம், தட்டப்பாறை, ராமச்சந்திரபுரம், உட்பட 16 கிராமங்களில் வாழும் நன்குடி வேளாளர் சமூக மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது.
நன்குடி வேளாளர் சமூகத்தினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவாகும். தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்றனர்.
நன்குடி வேளாளர் சமூகத்தில் பெண்களுக்கு எல்லா விசயங்களிலும் சம உரிமை உண்டு. அரசாங்கம் பெண்களுக்கும் சொத்துரிமை தருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'வீடு, நன்செய், புன்செய்' போன்றவை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆண், பெண் குழந்தைகளை வளர்ப்பதில் எந்த பாகுபாடும் இல்லை என்றாலும் கூட, பெண் குழந்தைகளே பெற்றோருடன் ஆயுள் முழுவதும் வசிப்பார்கள் என்பதால் இயல்பாகவே, அவர்கள் சற்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
இந்த சமூகத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கப்படி, திருமணத்தன்று மணமகள் வீடு வரும் மணமகன் தொடர்ந்து அங்கேயே தங்கி பெண் வீட்டாரில் ஒருவராக ஆயுள் முழுவதும் இணைந்து விடுவார். மணமகளின் பெற்றோர்களும் அவரை, 'மரு'மகனாக ஏற்றுக் கொள்வதோடு தங்களது முதுமை காலம் வரை மகள் குடும்பத்துடன் வசிப்பார்கள்.
நன்குடி வேளாளர் சமூகத்தினர் திருமணத்தில் கடைபிடிக்கும் சடங்குகள் வித்தியாசமானவை.
பெண் வீட்டாரே மாப்பிளை கேட்டுச் செல்வார்கள். முகூர்த்தப்பட்டு, திருமாங்கல்யம் பெண் வீட்டாரே வாங்கிக்கொள்ர். பரிசப்பட்டு மட்டுமே மணமகன் வீட்டார் கட்டுவர். 'பொன் உருக்குவது' 'முகூர்த்தக்கால் நடுவது' போன்றவையெல்லாம் பெண் வீட்டில் நடைபெறும். திருமண நாளன்று மாப்பிளையை இன்றும் யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.
வெளியூர் மக்கள் எங்கள் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சர்யப்படுவதாக கூறுகிறார் நன்குடி வேளாளர் சமூகத்தை சேர்ந்த மூதாட்டி முத்தம்மா சேரந்தையன்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தலைமுறைதலைமுறையாக நாங்கள் சிவகளை கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்தில் பல தலைமுறையாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டு வருகிறது.
எங்கள் கிராமத்தில் திருமணங்கள் வித்தியாசமான முறையில் நடைபெறும். மணமகள் இல்லத்தில் தான் திருமணம் நடைபெறும். மணமகன் மறுவீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மருமகள் வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து விடுவார்.
ஒரு வீட்டில் குலவைச் சத்தம் கேட்கிறது என்றால் அந்த வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையை தொட்டிலில் போடும் போது குலவைச் சத்தம் எழுப்புவோம். உரத்த குலவைச் சத்தமாக இருந்தால் அங்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்" என்கிறார்.
மேலும், "அதற்காக ஆண் குழந்தையை விரும்பவில்லை என அர்த்தம் கிடையாது. பெண் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள் என்பதாலோ என்னவோ பெண் பிள்ளைகள் மீது பிரியம் சற்று அதிகம்.
எங்கள் சமூகத்திற்கு என்று தென்னவன் கிளை, கேளரன் கிளை, திருவெம்பு கிளை, திருமால் கிளை, கன்றெறிந்தான் கிளை, நாராயணன் கிளை, காங்கேயன் கிளை, காளியார் கிளை என 8 பிரிவுகள் உண்டு.
ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அதே பிரிவைச் சேர்ந்தவர்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்வதில்லை. மாற்றுக் கிளையைச் சேர்ந்தவர்களுடன் தான் மகனுக்கோ, மகளுக்கோ மணம் முடிப்போம்" என்கிறார் சிவகளையை சேர்ந்த முத்தம்மா சேரந்தையன்.
வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் தனது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார் சிவகளையை சோந்த பள்ளி ஆசிரியர் மாணிக்கம். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எங்கள் ஊரில் வசிக்கும் அனைவருமே வீட்டோடு மாப்பிள்ளை தான். எனக்கு வயது 48 ஆகிறது எனக்கு திருமணம் ஆகி 28 ஆண்டுகள் ஆகிறது.
"எனது முன்னோர்கள் இந்த வழக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள் அவர்களுக்கு அது ஏதுவாக இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் கடினமாக இருந்தது. இந்த வீட்டோடு மாப்பிள்ளை வழக்கத்தால் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக நான் உணர்ந்தேன்" என்றார்.
"காரணம் எனது வீட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் எனது மனைவியின் தந்தை அதாவது எனது மாமனார் எடுத்து வந்தார். நான் ஒரு வீட்டிற்கு வாழ சென்றதால் அந்த வீட்டின் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் என்னால் வெகுநாளாக மாற முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்" என்கிறார்.
"ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எனது மகள் திருமணமாகும் நிலையில் உள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் அவர் என்னுடன் கடைசி காலம் வரை வாழ்வார் என்பதை நினைக்கும் போது வீட்டோடு மாப்பிள்ளை என்ற வழக்கம் எனக்கு இப்போது மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது" என கூறுகிறார் பள்ளி ஆசிரியர் மாணிக்கம்.
'ஆண் நண்பர்கள் கேலி செய்வார்கள், அதே வேளை பெண் நண்பர்கள் எங்கள் கிராமத்தில் பிறக்கவில்லையே என நினைத்து ஏங்குவார்கள்' என்கிறார், சமீபத்தில் திருமணமான சிவகளையை சேர்ந்த வங்கி மேலாளர் சுப்பையா.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என்னுடைய சொந்த ஊர் வாழ்வியல் குறித்து என் நண்பர்களுடன் விவாதிக்கும் போது ஆண் நண்பர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால் பெண் நண்பர்களை பொருத்தவரை, இந்த முறை மிக வித்தியாசமாக இருந்தாலும் 'நாங்கள் உங்கள் கிராமத்தில் பிறக்காமல் போய் விட்டோமே' என மிகுந்த ஏக்கத்துடன் என்னிடம் பல முறை சொல்லியுள்ளனர்" என தெரிவிக்கிறார்.
மேலும் பேசிய அவர், "அவ்வாறு கூறும் பெண் நண்பர்கள் திருமணம் முடிந்து பெற்றோரை விட்டு கணவன் வீட்டுக்கு செல்வதால் தங்களது அனைத்து சுதந்திரமும் பறிபோவதாக உணர்வதாக தெரிவிக்கின்றனர்.
முதலில் என்னை கேலி செய்த ஆண் நண்பர்கள் தற்போது எனக்கு திருமணமாகி ஆறு மாத காலம் ஆன நிலையில் என்னுடைய வாழ்வியல் முறையை பார்த்து ஆண்கள் இப்படியும் பெண் வீட்டாரின் சூழலுக்கு ஏற்றாற் போல் வாழ முடியுமா என ஆச்சர்யப்படுகின்றனர்.
என் தாத்தா, எனது அப்பா, தற்போது நான், அடுத்து வரும் தலைமுறை என அனைவரும் இதே வழக்கத்தை பின்பற்றி தான் வாழ்வோம். எங்கள் கிராமத்தின் வாழ்வியல் என்பது எங்கள் அடையாளம். இதில் தான் எங்களது மகிழ்ச்சியும் கௌரவம் அடங்கியுள்ளது" என்று அவர் கூறுகிறார் சுப்பையா.