சென்னை ஐபோன் தொழிற்சாலையில் மணமான பெண்களுக்கு பணி மறுப்பா?
26 Jun,2024
ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மணமான பெண்களை பணி அமர்த்த தடை நிலவுவதாக செய்தி வெளியானது தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது.
ஐபோன் தயாரிப்பு மூலம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் தொழிற்சாலையாக ஸ்ரீபெரும்புதூரின் ஃபாக்ஸ்கான் விளங்குகிறது. தொழிலாளர் விரோதப்போக்கு தொடர்பான சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் இந்த நிறுவனம் தற்போது, மணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
‘திருமணமான பெண்களின் குடும்ப நெருக்கடி, கர்ப்பம் உள்ளிட்ட காரணங்களினால், அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கானில் பணிக்கு எடுக்கப்படுவதில்லை’ என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு அடிப்படையிலான கட்டுரையை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஃபாக்ஸ்கான் இந்தியா - ஆப்பிள் ஐபோன் ஆலை பணியமர்த்தலின் பாலின பாரபட்சம் குறித்த புகார்கள், மத்திய தொழிலாளர் அமைச்சகம் கவனத்துக்கு சென்றது.
ஏற்கனவே 2022-ல் எழுந்த பணியமர்த்தல் நடைமுறை சர்ச்சைகளில் ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் தங்கள் நிர்வாக குறைபாடுகளை ஒப்புக்கொண்டன. மேலும் சிக்கல்களைத் தீர்க்க தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்தன. இந்த வரிசையில் 2024 நிலவரமாக பணியமர்த்தலில் புதிய பாரபட்சத்தை ராய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டி உள்ளது.
"2022-ம் பணியமர்த்தல் நடைமுறைகள் பற்றிய கவலைகள் முதன்முதலில் எழுப்பப்பட்டபோது, நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம், மாதாந்திர தணிக்கைகளை நடத்தவும், எங்கள் உயர் தரநிலைகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்யவும், ஃபாக்ஸ்கான் உட்பட அனைத்து சப்ளையர்களையும் அறிவுறுத்துகிறோம்" என்று ஆப்பிள் கூறி இருந்தது. ஃபாக்ஸ்கான் நிறுவனமும், "திருமண நிலை, பாலினம், மதம் அல்லது வேறு எந்த வடிவத்தின் அடிப்படையிலான வேலைவாய்ப்பு பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக மறுக்கிறோம்" என்றது.
ஆனால் தற்போதைய ராய்ட்டர்ஸ் செய்தி ஃபாக்ஸ்கானின் பாரபட்சத்தை வெளிக்காட்டி உள்ளது. இதனையடுத்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், 1976-ம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தை மேற்கோள் காட்டி, ஃபாக்ஸ்கானுக்கு எதிரான புதிய புகார் குறித்து விளக்கம் கோரியுள்ளது. திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் ஃபாக்ஸ்கானின் நடைமுறை தொடர்பாக, தமிழ்நாடு தொழிலாளர் துறையிடம் இருந்து விரிவான அறிக்கையை அமைச்சகம் கோரியுள்ளது.