பதவியேற்ற பிறகு முதல் பயணம்: இலங்கை சென்றார் வெளியுறவுத் துறை அமைச்சர்
20 Jun,2024
வெளியுறவுத் துறை அமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டு பயணமாக எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கை சென்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், தொடர்ந்து இரண்டாவது முறையாக எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராகியுள்ளார். பதவியேற்ற பின்னர் அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை சென்றார்.
அந்நாட்டின் தலைநகர் கொழும்பு சென்றடைந்த அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தாரக பாலசூரிய, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் வரவேற்றனர்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய பதவிகாலத்தில் எனது முதல் பயணமாக கொழும்பில் வந்திறங்கினேன். அன்பான வரவேற்புக்கு ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோருக்கு நன்றி.
தலைமைத்துவத்துடனான சந்திப்புகளை மேற்கொள்ள ஆவலுடன் உள்ளேன். எமது அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் கொள்கைகளின் முக்கிய இடத்தில் இலங்கை உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதுடெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கைத் தலைமையுடன் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவின் 'அண்டைநாடு முதலில்' என்ற கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.