ரெமல் புயலால் அசாமில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு
31 May,2024
கவுகாத்தி: மேற்குவங்கம், வங்கதேசம் இடையே ரெமல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. ரெமல் புயல் காரணமாக அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வௌ்ளத்தில் மிதக்கிறது.
கடந்த 28ம் தேதி முதல் அசாமில் பெய்து வரும் கனமழை வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி விட்டனர். 9 மாவட்டங்கள் முழுவதும் வௌ்ள நீரில் தத்தளிக்கின்றன. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
3238 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வௌ்ளத்தில் மூழ்கி உள்ளன. 2,34,535 கால்நடைகள் வௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டன. பிரம்மபுத்ரா, பராக் ஆகிய நதிகள் மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடும் நீர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பாய்ந்தோடுகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் சில மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களில் கனமழை, இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.