வெயிலால் தீ விபத்து... 4 வீடுகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு!
28 May,2024
தஞ்சாவூர் அருகே மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால் 4 வீடுகள் பற்றி எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வேளக்குடி கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகில் மூங்கில் கொல்லை ஒன்று உள்ளது. நேற்று பிற்பகல் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் நிலவியது. அப்போது எதிர்பாராத விதமாக மூங்கில் கொல்லையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீ காரணமாக, அந்த பகுதி முழுவதும் பெரும் புகைமூட்டம் நிலவியது.
அப்போது அருகில் இருந்த வீடு ஒன்றுக்கு தீ பரவி, அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவத் துவங்கியது. இந்த தீ விபத்தில் சம்பந்தம், கணேசன், ராஜாமணி மற்றும் விஸ்வநாதன் ஆகிய 4 நபர்களின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீவிபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் சேதம் அடைந்த வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.