ஈரான் அதிபர் மரணம்,தங்கம், பெட்ரோல் விலை அதிகரிக்கும் ஆபத்தா? உலக அளவில் ஏற்படும் தாக்கம் என்ன?
21 May,2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மரண சம்பவம் கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றின் விலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன், அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் சில அதிகாரிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் அனைத்து உடல்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியதும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதாவது WTI கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 0.41%, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.48% அளவுக்கும் விலை உயர்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில் ஈரானிடம் இருந்தும் கணிசமான அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அதேபோல், உலர் பழங்கள், ரசாயனங்கள், கண்ணாடி பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் ஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
அதேபோல், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு பாஸ்மதி அரிசி பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஈரானில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதனால், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் பங்குச் சந்தையில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி படையெடுத்துவிட்டதால், டிமாண்ட் அதிகரித்து தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. எனவே, ஈரானில் ஒரு நிலையான தலைமை உருவாகும் வரை, தங்கத்தின் விலை குறையாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.