பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக சென்றதால் அதிர்ச்சி!
20 May,2024
ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் நாசவேலை மேற்கொள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரகசிய தகவல்கள் வந்தன. இதனையடுத்து எல்லையிலும், தேசத்தின் உள்ளேயும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லையின் ஊடுருவல்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் ஆகியவற்றை முறியடிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் முக்கியத் தலைவர்களுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன. பாஜக தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமன்றி, காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே உட்பட பலருக்கும் நாட்டின் உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டது. எல்லையோர மாநிலங்களில் அதிகரித்த ட்ரோன் வழி ஊடுறுவல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவை முடக்கப்பட்டன.
பல கட்டங்களை உள்ளடக்கிய மக்களவைத் தேர்தல், எந்த பாதிப்பும் இன்றி கிட்டத்தட்ட சுமூகமான போக்கில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதன் மத்தியில் குஜராத்தில் சர்வதேச ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பேர் கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகளை மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அகமதாபாத்திற்கு வந்த பயங்கரவாதிகளின் நோக்கத்தை கண்டறிய, தற்போது ரகசிய இடத்தில் அவர்களை வைத்து ஏடிஎஸ் விசாரித்து வருகிறது. 4 பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகள் நால்வரும் தங்களது திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத் ஏடிஎஸ் அவர்களை கைது செய்தது. இந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள தங்களது கையாளுபவர்களின் உத்தரவுக்காக காத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறைவிடங்களில் இருந்து தங்களைச் சேர வேண்டிய ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருட்களுக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் புலப்பட்டது.
பயங்கரவாதிகள் வசமிருந்த ஸ்மார்ட்போன்களில் இருந்த சமூக ஊடக சங்கேத உரையாடல்களை ஏடிஎஸ் மீட்டு வருகிறது. பாஜகவின் சர்ச்சைக்குரிய நுபுர் சர்மாவை கொல்லும் சதித்திட்டத்துடன் பிடிபட்ட, மௌல்வி சோஹைல் அபுபக்கர் வழக்கை சூரத் போலீசார் ஏற்கெனவே விசாரித்து வரும் நேரத்தில், 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கே கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே நால்வரும் இலங்கையிலிருந்து சென்னை வழியாக குஜராத்தை அடைந்திருப்பதால், சென்னையில் எங்கேனும் தங்கினார்களா, எவரையேனும் சந்தித்தார்களா என மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.