நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது
17 May,2024
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறினார். அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் அமைப்பான இந்திய அமெரிக்கன்ஸ் இம்பாக்ட் சார்பில் வருடாந்திர மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், இந்திய வம்சாவளியும் அந்த நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரீஸ் பேசுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் நடக்கும் தேர்தல்களில் பங்கேற்கும் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் அந்த எண்ணிக்கை அவர்களுடைய மக்கள் தொகையை பிரதிபலிப்பதாக இல்லை. வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில், அமெரிக்காவில் 2வது பெரிய சமூகமான இந்திய அமெரிக்கர்கள் நாட்டின் பல இடங்களில் அதிபர் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்திய அமெரிக்கர்களுக்காக இம்பாக்ட் அமைப்பு செய்து வரும் பணி மகத்தானது. நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்திருக்க வேண்டும்.
இந்த நாட்டுக்கு நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. அதனால்தான் நாம் இங்கு ஒன்றாக இருக்கிறோம். இன்னும் 6 மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆறு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். அதாவது, நாம் எந்த வகையான உலகில் வாழ விரும்புகிறோம். எந்த நாட்டில் வாழ விரும்புகிறோம்.
அந்த கேள்விக்கு நாம் பதிலளிக்கும் வழிகளில் ஒன்று, இந்த தேர்தலின் முடிவு அடிப்படை வழிகளில் முக்கியமானது ஆகும் என்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது இந்திய வம்சா வளியினரான அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி,ரோ கன்னா,பிரமிளா ஜெயபால், ஸ்ரீதானேதார் உள்ளிட்ட 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக உள்ளனர். வரும் தேர்தலில் இது 10 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது