காசா மோதலில் ஐநா பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த இந்தியர் உயிரிழப்பு
14 May,2024
காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது.
ரஃபாவில் அதிகளவில் பொதுமக்கள் வசிப்பதால் அங்கு தாக்குதல் நடத்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு உலக நாடுகள் எச்சரித்தன. இருப்பினும், இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதல் நடத்துவதில் உறுதியாக இருந்தது.
ஏற்கெனவே ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டது, இதற்கிடையே ஐநா பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. உயிரிழந்த அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதோடு, அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று கூறப்படுகிறது.
ஐநா பணியாளர் கொல்லப்பட்டதற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பணியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதாகவும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தி உள்ளது.
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 35,091 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 78,827 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு, இஸ்ரேலில் 1,139 பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.