இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை சரிவு, இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரிப்பு! –
09 May,2024
இந்தியாவில் கடந்த 1950 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் மத ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ளது.
1950-2015ல் மத சிறுபான்மையினரின் பங்கு: ஒரு பகுப்பாய்வு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த ஆய்வறிக்கையில் கடந்த 65 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மதம் பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 1950ல் இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தவரின் எண்ணிக்கை 84.68 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 65 ஆண்டுகளில் 7.82 சதவீதம் குறைந்து 78.06 சதவீதமாக மாறியுள்ளது. கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை 2.2 ஆக இருந்த நிலையில் 2015ல் 2.36 ஆக உயர்ந்துள்ளது. சீக்கியர்களின் எண்ணிக்கையும் 1.24ல் இருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை 9.84 சதவீதத்திலிருந்து உயர்ந்து 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. சராசரியாக 43.15 சதவீதம் இஸ்லாமிய மக்கள் தொகை 65 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை, அரசியல் முடிவுகள், கொள்கைகள் மற்றும் சமூக நடைமுறைகள் காரணமாக சிறுபான்மையினரின் வளர்ச்சியும், பங்கும் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.