காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கம்... கனடா தூதரிடம் இந்தியா கண்டனம்
30 Apr,2024
கனடா - இந்தியா இடையிலான சுமூகம் கெடும் வகையில் மற்றுமொரு நெருடலான சம்பவம் நடந்தேறியதை அடுத்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது.
கல்சா தினத்தை முன்னிட்டு நேற்று கனடாவின் டொராண்டோ நகரின் மிகப்பெரிய வருடாந்திர கூட்டங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்ற எழுந்தபோது காலிஸ்தான் சார்பு முழக்கங்கள் கூட்டத்தை அதிரச் செய்தன.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட முறையில் உரையாற்றும் நிகழ்வில் காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கங்களை எழுப்பியது தொடர்பாக கண்டனம் தெரிவிக்க, இந்தியாவுக்கான கனடாவின் துணை உயர் ஆணையரை வெளியுறவு அமைச்சகம் இன்று அழைத்தது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், "கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்குக் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் வெளியை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் தொடர் வெளிப்பாடுகள் இந்தியா - கனடா உறவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அது மட்டுமல்லாது கனடா குடிமக்களுக்கு வன்முறை மற்றும் குற்றச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரான ’காலிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம் கனடாவில் எதிரொலிப்பதை இந்தியா விரும்பவில்லை. கனடா பிரதமர் மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தனது உரையைத் தொடங்க மேடைக்குச் சென்றபோதும், காலிஸ்தான் முழக்கங்கள் எழுந்தன. இந்நிகழ்ச்சியில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் டொராண்டோ மேயர் ஒலிவியா சோவ் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.
கடந்த ஆண்டு சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரூடோ, இந்தியாவை வெகுவாக சீண்டினார். மேலும் அவர் தனது உரையில், கனடாவில் சீக்கியர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எப்போதும் பாதுகாப்பதாகவும், வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக துணை நிற்பதாகவும் உறுதியளித்தார்.
கனடா அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை ’அபத்தமானது’ என்று கூறி இந்தியா முற்றிலும் நிராகரித்தது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா புகலிடமாக இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியும் வருகிறது. நிஜ்ஜார் கொலையில் இந்தியா மீது குற்றம்சாட்டிய கனடா பிரதமர் அதற்கான ஆவணங்களை நிரூபிப்பதில் தடுமாறி வருகிறார்.