சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சீருடையில் சுற்றித் திரிந்தவர் கைது!
27 Apr,2024
குடும்பத்தினரை ஏமாற்றுவதற்காக டெல்லியில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி சீருடையில் சுற்றித் திரிந்த மோசடி வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், கவுதம புத்தா நகரைச் சேர்ந்தவர் சங்கீத் சிங் (24). இவர், டெல்லி விமான நிலையம் அருகே உள்ள மெட்ரோ ஸ்கை வாக் பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானி சீருடையில் டிப்-டாப்பாக நேற்று சுற்றிக் கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள், சங்கீத் சிங்கை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி என கூறி, கழுத்தில் தொங்கவிட்டிருந்த அடையாள அட்டையை அவர்களிடம் நீட்டியுள்ளார்.
அதனை பரிசோதித்தபோது, அது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஆன்லைன் செயலி ஒன்றை பயன்படுத்தி, சங்கீத் சிங் போலி அடையாள அட்டைகளை உருவாக்கியிருந்தது தெரிய வந்தது.
பின்னர், அந்த அடையாள அட்டையை வைத்து துவாரகாவில் உள்ள செக்டார் 9-ல் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி சீருடை உள்ளிட்டவற்றை வாங்கி, அணிந்துக் கொண்டு சுற்றியது தெரிய வந்தது. மேலும், விமான துறையில் பணியில் சேர்வதற்காக கடந்த 2020ம் ஆண்டில் மும்பையில் ஓராண்டு ஏவியேஷன் ஹாஸ்பிடாலிட்டி படிப்பை சங்கீத் சிங் முடித்துள்ளார்.
அதன் பிறகு அவர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானியாக வேலை செய்வதாகக் கூறி தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஏமாற்றி வந்துள்ளார். விசாரணைக்குப் பின்னர் போலி விமானி சங்கீத் சிங், போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.