இலங்கை தமிழர்கள்.,. ராமேஸ்வரம் அருகே மணல் திட்டையில் சிக்கித்தவித்த மூவர் மீட்பு!
                  
                     22 Apr,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த சிறுவன் உட்பட மூவர் மணல் திட்டையில் சுட்டெரிக்கும் வெயிலில் சூடு தாங்காமல் தவித்த நிலையில், கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
	 
	இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இருந்த போதும் இலங்கையில் தமிழர்களின் நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டபாடில்லை. கொரோனாவுக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் மிகப் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்து வருகிறது.
	 
	 
	அவ்வாறு வருபவர்கள் நேரடியாக தமிழ்நாட்டுக்கு வர முடியாததால், ராமேஸ்வரம் அருகே உள்ள மணல் திட்டைகளில் தஞ்சம் அடைகின்றனர். அவ்வழியே செல்லும் மீனவர்கள் அளிக்கும் தகவலின் பெயரில் கடலோரக் காவல் படையினர் அவர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தனுஷ்கோடி அருகே உள்ள 5-ம் திட்டை பகுதியில் இன்று படகில் மீன்பிடிக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மணல் திட்டையில் சிறுவன் உட்பட மூவர் கடும் வெயில் தாங்க முடியாமல் தவித்து வந்ததை அவர்கள் பார்த்துள்ளனர்.
	 
	உடனடியாக கரைக்கு திரும்பிய அவர்கள், இது தொடர்பாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர், வெயில் தாங்காமல் மணல் திட்டையில் தவித்துக் கொண்டிருந்த சிறுவன் உள்ளிட்ட மூவரையும் மீட்டு ராமேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு இவர்கள் மூவரும் ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.