சிக்கன்காய்ச்சல் ? பறவைக் காய்ச்சல்! கோழிகறி சாப்பிட்டால் இது தான் நடக்கும்!
22 Apr,2024
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கும் நிலையில் தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பறவை காய்ச்சல் பீதியால் கோழி விற்பனை சற்றே குறைந்திருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிக்கன் சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவுமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சில கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு உச்சபட்ச கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கிறது
தமிழகத்திலிருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வரும் நிலையில் தமிழகத்திலும் நோய் தொற்று பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்: வடக்காடு, வாளையார், ஆனைகட்டி, மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், செம்பனம்பாதி, நடுப்புணி, ஜமீன் காளையாபுரம், கோபாலபுரம், வீரப்ப கவுண்டன் புதூர் உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கேரளா மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எல்லையில் கண்காணிப்பு: தற்போது சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுக்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர் எனவும். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறவை காய்ச்சல்: கேரளா எல்லையில் உள்ள கன்னியாகுமரி தொடங்கி கோவை வரை தமிழக பகுதிகளில் ஏராளமான கோழிப் பண்ணைகள் இருக்கின்றன அது மட்டுமில்லாமல் தமிழக கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோழிகளிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு அவற்றிற்கு பறவை காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருப்பதால் கோழி நுகர்வோர் சற்றே பயத்தில் உள்ளனர்.
விற்பனை சரிவு: இதனால் தமிழகத்தில் கோழி விற்பனை லேசாக சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் டன் கணக்கில் கோழிகள் விற்பனையாவது வழக்கம். ஆனால் இந்த முறை மகாவீர் ஜெயந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோழி விற்பனை வெகுவாக குறைந்து இருப்பதாக கூறுகின்றனர் வியாபாரிகள். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கோழி ஏற்றுமதி சற்று குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் வீதி இருப்பதால் கேரளாவுக்கு அனுப்பப்படும் கோழிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
நோய் பரவுமா?: இந்த நிலையில் கோழிகளை சாப்பிடுவதாலும் முட்டைகள் சாப்பிடுவதாலும் பறவை காய்ச்சல் பரவுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பொதுவாக கோழிகளையும் முட்டைகளையும் உயர் வெப்ப நிலையில் சமைப்பதால் அதிலுள்ள வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் மடிந்து விடும். கோழி இறைச்சியை நன்கு சமைத்து சாப்பிடும் போது பறவை காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பில்லை என கூறுகின்றனர் மருத்துவர்கள். அதே நேரத்தில் கோழி பண்ணைகளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அருகில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் முட்டைகளை பச்சையாக எடுத்துக் கொள்வதும் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.