இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் 17 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் சிறைபிடிப்பு
14 Apr,2024
இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே 17 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசாவில் ஹமாஸ் படையினரை எதிர்த்து இஸ்ரேல் கடந்த 6 மாதமாக போரிட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் ஆதரவு படைகளான ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிலும், ஹவுதி படையினர் ஏமன் வளைகுடா கடல் பகுதியிலும் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரானிய தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அரபிக்கடல் ஹார்முஸ் ஜலசந்தி அருகே நேற்று காலை போர்த்துகிசீய நாட்டு கொடியுடன் வந்த சரக்கு கப்பலை ஈரான் கடற்படையினர் அதிரடியாக சிறை பிடித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள், அக்கப்பலை ஈரான் கடல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இக்கப்பல் இஸ்ரேல் கோடீஸ்வரர் இயல் ஆபரின் ஜோடியாக் குழுமத்திற்கு சொந்தமானது. எனவே, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், இந்த சரக்கு கப்பலை சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்தியர்களை பத்திரமாக மீட்க, ஈரான் டெஹ்ரானில் உள்ள தூதரகம் மூலமாகவும் டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் மூலமாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சிறைபிடிப்பால் எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கலாம் என்பதால் ஈரான் நாட்டு வான் வழிப்பாதையை சர்வதேச விமானங்கள் தவிர்த்து மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. ஈரானுக்கு செல்லும் பல நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.