பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை, இந்திய உளவாளிகள் குறிவைத்து கொல்வதாக ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்திக்கு எதிராக இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி ஆகிய பிரபல உளவாளிகளிகளின் பாணியில், பாகிஸ்தானில் பதுங்கியபடி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளை, இந்திய உள்வாளிகள் குறிவைத்து கொன்று வருவதாக கார்டியன் செய்தி குற்றம்சாட்டுகிறது. இந்திய பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பான ’ரா’ உள்வாளிகள் இதற்கான ரகசிய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அரங்கேற்றுவதாகவும் கார்டியன் செய்தி விவரிக்கிறது.
2020-ம் ஆண்டும் முதல் பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதிகள் படுகொலைகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செயல்படும் ’ரா’ கிளை, பாகிஸ்தானின் இந்திய ஸ்லீப்பர் செல்கள், ஜிஹாதிகள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகளை பணிக்கு அமர்த்தி இந்த வேட்டையாடலை சாத்தியமாக்கி உள்ளார்கள். 2019 புல்வாமா தாக்குதலை அடுத்து பிரதமர் அலுவலகம் முன்னெடுத்த, தேசிய பாதுகாப்புக்கான திடமான அணுகுமுறையின் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் படுகொலைகளை அரங்கேற்ற இந்திய உளவாளிகளுக்கு அனுமதியும், ஆதரவும் அளிக்கப்பட்டதாகவும் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு மண்ணில் படுகொலை செய்தது மற்றும் படுகொலைக்கு முயன்றதாக இந்தியா மீது குற்றம் சாட்டப்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டதில் இந்தியா மீது நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முழங்கினார். இதனையடுத்து இருநாட்டு உறவு சமநிலை குலைந்திருக்கிறது.
இரண்டாவதாக, இன்னொரு காலிஸ்தானி பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூன் மீதான கொலை முயற்சியை தாங்கள் முறியடித்ததாக அமெரிக்கா ஆதாரங்களுடன் விளக்கியது. இந்த இரண்டுக்கும் அப்பால் இந்தியாவின் அண்டை தேசமான பாகிஸ்தானில் 20க்கும் மேற்பட்ட எதிரிகளை இந்திய உளவாளிகள் குறிவைத்து ஒழித்திருப்பதாக தற்போது மூன்றாவது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் இந்தியாவின் அடையாளம் தெரிவிக்க விரும்பாத உளவுத்துறை அதிகாரிகள் அளித்த தகவல்களை கார்டியன் மேற்கோள்காட்டியுள்ளது.
இந்த படுகொலைகளின் பின்னணியில் இந்திய உளவாளிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் பெரும்பாலும் அமீரகத்தில் இருந்து திட்டமிடப்பட்டதாகவும் கார்டியன் கூறுகிறது. இதற்காக உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் ஜிஹாதிகளை பணிக்கு அமர்த்தி இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் குற்றவாளிகளுக்கு மில்லியன் கணக்கிலான பண்மும், ஜிஹாதிகளுக்கு பணத்துடன் அவர்கள் பாணியில் ’காஃபிர்கள்’ களெயெடுப்பு குறித்து போலி தகவல்களை அளித்தும், இந்திய உளவுத்துறையினர் தங்கள் வேட்டையாடலை நிறைவேற்றியதாக கார்டியன் செய்தி விவரிக்கிறது.
இந்தியர்கள் மத்தியில் பெருமிதமாக பார்க்கப்படும் இந்திய உளவுத்துறையினரின் பாகிஸ்தான் வேட்டையாடல்கள், சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான அதிருப்தியை சம்பாதித்துள்ளன. எனவே ’தி கார்டியன்’ செய்திக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை, ’தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்’ என்று இந்தியா வர்ணித்துள்ளது. மேலும் ’பிற நாடுகளில் குறிவைக்கப்பட்ட கொலைகளை நடத்துவது இந்திய அரசின் கொள்கை அல்ல’ எனவும் இந்தியா மறுப்பு வெளியிட்டுள்ளது