நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
22 Mar,2024
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கட்சியினர் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாகவே தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.
அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.