ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல்!நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட படகு!
12 Mar,2024
குஜராத் அருகே அரபிக் கடலில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திச் சென்ற பாகிஸ்தான் படகு சுற்றி வளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் டோர்னியர் விமானம் மூலம் கடல்-வான் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி), இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ் குஜராத்) ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. இதில், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து அரேபிய கடலில் சுமார் 350 கி. மீ. தொலைவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு படகு பிடிக்கப்பட்டது. அதில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், அந்த படகில் வந்த 6 பேரை கைது செய்தனர்.
உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் நேற்று அரேபிய கடலில் இந்திய கடலோர காவல்படை, தனது கப்பல்களை நிலை நிறுத்தியது. மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் படகுகளை ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கும் பணியை கடலோர காவல் படை, தனது டோர்னியர் விமானத்துக்கு வழங்கியது. அப்பகுதியில் விரிவான தேடுதலுக்குப் பின்னர், என்சிபி மற்றும் ஏடிஎஸ் குஜராத் படையினர், சந்தேகத்துக்கிடமான படகை அடையாளம் கண்டு, சுற்றி வளைத்து பிடித்ததாக கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய கடலில் கடந்த ஒரு மாதத்தில் இந்திய விசாரணை அமைப்புகள் போதைப் பொருள் கடத்தலை சுற்றி வளைக்கும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும். கடந்த பிப்ரவரி 26ம் தேதி அன்று 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.