87 வயது மாமனாரை இரும்பு கைத்தடியால் சரமாரியாக தாக்கிய பெண் அதிகாரி கைது
12 Mar,2024
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் 87 முதியவரை, இரும்பு கைத்தடியால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய மருமகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமுறைகள் மாறினாலும் முதியோர்களின் இருப்பு என்பது வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கவலைக்குரியதாகவே தொடர்கிறது. அதுபோலவே படித்து வேலையில் இருப்பவர்கள் பண்பானவர்கள் என்பதும் கற்பிதங்களில் ஒன்றாகவே சேர்கிறது. சமூகத்தின் கசப்பான இந்த 2 அவலங்களுக்கும் உதாரணமாக கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கும் ஒரு சம்பவம், வீடியோவாக வெளியாகி காண்போரை அதிரச் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் பதமநாபா. இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மருமகள் உமா சங்கரி கர்நாடக மாநில மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். வீட்டில் இருக்கும் தந்தையை வெளிநாட்டில் இருந்தபடி கவனித்துக் கொள்வதற்காக, அவரது மகன் வீட்டின் வரவேற்பறையிலும், வீட்டைச் சுற்றிலுமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்தார்.
இந்த நிலையில் மார்ச் 9 அன்று நண்பகலில் வயதான மாமனாரை அவரது இரும்பு கைத்தடி கொண்டே மருமகள் உமா சங்கரி தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகின. வயது முதிர்வுக்கே உரிய மெலிந்த தேகமும், பலஹீன வாகுமாக காட்சியளிக்கும் அந்த முதியவரை, மருமகள் உமா சங்கரி சரமாரியாக இரும்பு கைத்தடியால் தாக்குகிறார். ஏதோ வாக்குவாதம் செய்தவாறே தாக்குவதோடு, அடி தாங்காது கைத்தடியை பறிக்க வரும் முதியவரை தரையில் தள்ளவும் செய்கிறார் உமா சங்கரி. இதில் வேரறுந்த மரம் போல அந்த முதியவர் விழும் காட்சி காண்போரை அதிர்ச்சியடையச் செய்கிறது.
இந்த வீடியோ பொதுவெளியில் வைரலானதை அடுத்து, போலீஸார் அந்த பெண் அதிகாரியை கைது செய்துள்ளனர். சிசிடிவி பதிவை வெளிநாட்டிலிருந்து கண்காணித்த பத்மநாபாவின் மகன், உடனடியாக தனது மகளைத் தொடர்பு கொண்டுள்ளார். அதன் மூலம் முதியவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு, உமா சங்கரியை காவல்துறை கைது செய்யவும் ஏதுவானது. இரும்பு கைத்தடியால் மருமகள் உமா சங்கரி தாக்கிய காயங்களோடு, அவரால் கீழே தள்ளப்பட்டதில் மர சோபாவின் கைப்பிடியில் பலத்த தலைக்காயமுற்ற முதியவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.