உயில் எழுதாமல் மரணம் அடைந்த பெண்ணின் சொத்தில் யாருக்கு உரிமை கிடைக்கும்
10 Mar,2024
ஒரு பெண் தன்னுடைய சொத்துக்களுக்கு உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால் அந்த சொத்துக்கள் இந்திய சட்டப்படி யாருக்கு செல்லும் என்பதை ஒரு முக்கியமான வழக்கின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். மாமனார், மாமியாருக்கு சென்ற சொத்து: 1955 ஆம் ஆண்டு நாராயணி தேவிக்கும், தீனதயாள் சர்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் தீனதயாள் சர்மா இறந்துவிட்டார். இதனை அடுத்து நாராயணிதேவி, கணவர் வீட்டை விடுத்து மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பெற்றோர் வீட்டில் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்தார் சொத்து வாங்கினார். அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை குழந்தைகளும் இல்லை. இந்நிலையில் திடீரென அவர் 1996 ஆம் ஆண்டு இறந்து விட்டார் . பெற்றோருக்கு தான் அவருடைய சொத்து கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தீனதயாள் சர்மாவின் பெற்றோரும் சொத்துக்கு உரிமை கொண்டாடினர்.
இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இந்திய சட்டத்தின் படி மாமனார், மாமியாருக்கு தான் சொத்தில் உரிமை உள்ளது என தீர்ப்பு கிடைத்தது. கணவர் இறந்த பின் எந்த ஒரு ஆதரவோ நிதியோ வழங்காதவருக்கு நாராயணி தேவி கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து சென்றுவிட்டது, ஆனால் உடன் வைத்து பராமரித்த பெற்றோருக்கு கிடைக்கவில்லை. என்ன சொல்கிறது இந்திய சட்டம்: ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் அல்லது அவருக்கு சொந்தமான பொருட்கள் அவரது குழந்தைகளுக்கு அல்லது கணவருக்கோ சென்று சேரும் இதுதான் இந்திய சட்டத்தின் நடைமுறை. ஒரு பெண் மரணம் அடைந்து விட்டால் அவர் சம்பாதித்த சொத்துக்கள் முதலில் அவரது வாரிசுகளான குழந்தைகளுக்கு வழங்கப்படும், குழந்தை இல்லையெனில் கணவருக்கு செல்லும். கணவரும் இறந்துவிட்டார் என்றால் மாமியாருக்கு செல்லும்.
ஒரு திருமணமான பெண்ணின் கணவரின் பக்கத்தில் உள்ள அனைத்து வாரிசுகளும் இறந்து விட்டால் மட்டுமே, பெண்ணின் பெற்றோருக்கு சொத்தில் உரிமை கிடைக்கும். எனவே பெண்கள், தங்களின் சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்கு உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவரது விருப்பத்திற்கு மாறாக சட்டப்படி தான் அது உரியவரிடம் சென்று சேரும். எனவே பெண்கள் தங்களுடைய சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைப்பது சிறந்தது என்கின்றனர் வழக்கறிஞர்கள். நாராயணி தேவி வழக்கில் நிகழ்ந்ததை போல சில சமயங்களில் எந்த வகையிலும் பொருத்தமற்றவராக இருந்தாலும், சட்டத்தின் அடிப்படையில் சிலரிடம் சொத்துக்கு உரிமம் செல்வதை தவிர்க்க முடியாது என சுட்டிக்காட்டுகின்றனர்.