நடுக்கடலில் கருப்புக்கொடி.. தமிழக மீனவர்களைக் கண்டித்து இலங்கை மீனவர்கள் போராட்டம்!
04 Mar,2024
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்களைக் கண்டித்து இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் இன்று போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன்படி யாழ் மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். யாழ்பாணம் - குருநகரைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 21 படகுகளில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஊர் காவற்துறை இறங்கு துறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த குருநகர் மீனவர்கள், நெடுந்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடிகளைப் பறக்க விட்டுள்ளனர். நெடுந்தீவுக்கும், நயினாதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மீனவர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த பகுதியில் தான் தமிழக மீனவர்கள் அதிகம் எல்லை மீறுவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் பெரும்பாலான ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் கரை திரும்பியுள்ளன.