விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் உயிரிழந்த முதியவர்... ரூ.30 லட்சம் அபராதம்
01 Mar,2024
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
மும்பை விமான நிலையத்தில் 80 வயது முதியவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாததில் அவர் பரிதாபமாக இறந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12 அன்று நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டிஜிசிஏ) எர் இந்தியா நிறுவனத்தின் அலட்சியத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ரூ30 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் வயதில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சாய்தளப் பாதை, கழிப்பிட வசதி, சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் இவர்களுக்கு உரிய வகையில் கிடைக்கப்பெறுவதில்லை.
சாமானியர்களுக்கான பேருந்து நிலையம் மட்டுமன்றி, சற்றே வசதி படைத்தவர்களுக்கான விமான நிலையத்திலும் இதே அவலம் நீடிப்பதை, மும்பை விமான நிலையத்தின் பிப்.12 சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
அன்றைய தினம் 80 வயது பயணி ஒருவர் தனது மனைவியுடன் நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை விமான நிலையம் வந்திறங்கினார். விமானத்திலிருந்து முனையத்துக்கு செல்ல தனக்கு சக்கர நாற்காலி வேண்டுமென, அவர் விமான நிலையப் பணியாளர்களிடம் கோரியிருக்கிறார். சக்கர நாற்காலிகள் தேவை தட்டுப்பாடாக இருப்பதாக கூறி அவரை காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முதியவர் பின்னர் மனைவி உதவியுடன் தட்டுத் தடுமாறி நடைபோட்டிருக்கிறார். ஆனால் சற்று நேரத்தில் தடுமாறி சுருண்டு விழுந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கே இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியது.
தொடர்ந்து ஏர் இந்தியா வழங்கிய பதிலில் டிஜிசிஏ திருப்தியடையவில்லை. ‘தவறான ஊழியர்களுக்கு எதிராக விமான நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க மேற்கொள்ளும் எந்த திருத்த நடவடிக்கைகளையும் விமான நிறுவனம் சமர்ப்பிக்கத் தவறிவில்லை’ என டிஜிசிஏ அதிருப்தி தெரிவித்தது. இதனையடுத்தே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.