விசா விதிகள் மீறல்.. இந்தியாவிலிருந்து வெளியேறுகிறார் பிரெஞ்சு பத்திரிகையாளர்!
17 Feb,2024
வெளிநாட்டு இந்திய குடிமகன் அட்டையை ரத்து செய்யும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பிரெஞ்சு பத்திரிகையாளர் வனேசா டக்னாக் இன்று இந்தியாவிலிருந்து வெளியேறினார்.
பிரெஞ்சு பத்திரிகைகளான 'லா க்ரோயிக்ஸ்' , 'லீ பாயிண்ட்’, சுவிஸ் செய்தித்தாளான 'லீ டெம்ப்ஸ்' மற்றும் பெல்ஜிய நாளேடான 'லீ சோயர்' ஆகியவற்றின் தெற்காசிய நிருபராக இந்தியாவிலிருந்து பணியாற்றி வந்தவர் வனேசா டக்னாக். இவருக்கு கடந்த மாதம், வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு அலுவலகம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அவரது வெளிநாட்டு இந்திய குடிமகன் அட்டையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என கேட்கப்பட்டிருந்தது.
மேலும், "குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட விதிகள்/ ஒழுங்குமுறைகளின் கீழ் தேவைப்படும் எந்த சிறப்பு அனுமதியும் இல்லாமல் பத்திரிகை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சூழலில் வனேசா டக்னாக் இன்று இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று, நான் இந்தியாவை விட்டு புறப்படுகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு மாணவியாக வந்த நாடு. 23 ஆண்டுகளாக நான் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றிய நாடு. நான் திருமணம் செய்து கொண்ட, என் மகனை வளர்த்த, என் வீடு என அழைக்கும் நாடு. இந்தியாவை விட்டு வெளியேறுவது எனது விருப்பம் அல்ல. எனது கட்டுரைகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி அரசாங்கத்தால் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
வனேசா டக்னாக்கிற்கு இந்திய அரசு நோட்டீஸ் வழங்கியதைத் தொடர்ந்து இந்தியா - பிரான்ஸ் இடையிலான தூதரக அதிகாரிகள் அளவிலும் கூட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் க்வாட்ரா, "விதிகளுக்கு இணங்கும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கை அணுகும் இந்தியாவின் செயல்முறையை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள விஷயங்களில் மக்கள் சுதந்திரமாகவே உள்ளனர். ஆனால் இங்கு முக்கிய பிரச்சினை என்னவென்றால், அந்த நபர் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குகிறாரா என்பதுதான்" என தெரிவித்துள்ளார்.