லட்சத்தீவு, சீன விவகாரம், சுற்றுலா வீழ்ச்சி.இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்:
31 Jan,2024
மாலே: இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் அதிபர் முகமது முய்சு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றுவந்தது, அதன்பின் மாலத்தீவு அமைச்சர்கள் மோடியையும், இந்தியாவையும் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சர்ச்சைக்குள்ளான மூன்று அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்தார். அதன்பின் அவர் சீனா சென்று திரும்பியது, இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கெடுவை விதித்தது போன்றவை அடுத்தடுத்த சர்ச்சைகள் கிளம்பின. சிறிய தீவு நாடான மாலத்தீவு, இந்தியாவுடனான உறவை மோசமடைய செய்வதால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தன.
அதற்கேற்றார் போல் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மாலத்தீவு ஜம்ஹுரி கட்சித் தலைவர் காசிம் இப்ராகிம் கூறுகையில், ‘எந்தவொரு நாட்டைப் பற்றியும் குறிப்பாக அண்டை நாடுகளுடனான உறவைப் பாதிக்கும் வகையில் யாரும் பேச வேண்டாம். ஒவ்வொரு தனி மனிதனும் தன் சொந்த நாட்டிற்கு கடமைப்பட்டவன். முன்னாள் அதிபர் இப்ராகிம் சோலி இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பணியாற்றினார்.
தற்போதைய அதிபர் முகம்மது முய்சு, தனது சீனப் பயணத்திற்குப் பிறகு தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ‘இந்தியா அவுட்’ என்ற பிரசாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியும். இந்தியாவை தாக்க முயல்வது நமது நாட்டுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும்’ என்று கூறினார்.