அமெரிக்க உயர்கல்விக்காக ஒரே ஆண்டில் 14 லட்சம் விசா
30 Jan,2024
2023-ம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கியதில் அமெரிக்கா புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கியது மற்றும் விசா நியமனத்துக்கான பார்வையாளர் காத்திருப்பு நேரத்தை பெருமளவு குறைத்தது உள்ளிட்டவற்றில் அமெரிக்கா பெரும் பாய்ச்சல் காட்டியுள்ளது. முந்தைய ஆண்டான 2022-ஐ விட கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியர்களிடமிருந்து அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பங்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளன. பார்வையாளர் விசாக்களுக்கான நியமன காத்திருப்பு நேரமானது சராசரியாக 1000 நாட்கள் என்பதிலிருந்து 250 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் கடந்தாண்டு 14 லட்சம் விசாக்களை செயல்படுத்தியதோடு, விசா நியமன காத்திருப்புக்கான நேரமானது 75 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக உலகளவில் அமெரிக்காவுக்கான 10 அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களில் ஒருவர், இந்தியர் என்றளவுக்கு தற்போதைய மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. விசா வழங்கலில் தேவை அதிகரித்ததில் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதாயிற்று. மேலும் தொழில்நுட்ப அளவில் செய்யப்பட்ட சில மேம்பாடுகளும், விசா எண்ணிக்கையில் நேரிட்ட புதிய சாதனைக்கு காரணமாகி உள்ளன.
2023-ம் ஆண்டில் அவ்வாறு வழங்கப்பட்ட விசாக்களில், 1,40,000 விசாக்கள் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்ல விண்ணப்பித்தவை. இதிலும் இதர உலக நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்கள், உலகின் முதல் 4 மாணவர் விசா செயலாக்கப் பணியிடங்களாகவும் சாதனை படைத்துள்ளன. அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்ற மாற்றமும் தற்போது நிகழ்ந்துள்ளது
வேலைவாய்ப்பு சார்ந்த விசாக்கள் இந்தியர்களின் முன்னுரிமையில் உள்ளன. கடந்தாண்டில் மட்டும் அமெரிக்க வேலைக்காக இந்திய பட்டதாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக 3,80,000 விசாக்கள் வழங்கப்பட்டன. மேலும் நடப்பு 2024-ல் ஒரு முன்னோடித் திட்டமாக ஹெச்1பி வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவில் தங்கள் விசாக்களை புதுப்பிக்கும் நடைமுறைகளையும் விரைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இடையில் மந்தமடைந்திருந்த அமெரிக்காவுக்கான இந்தியர்களின் பாய்ச்சல் தற்போது புது வேகமெடுத்துள்ளது.