சென்னை - ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை.,
30 Jan,2024
4 ஆண்டுக்குப் பின் .
சென்னை- ஹாங்காங் இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமான சேவை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயங்கத் தொடங்குகிறது.
.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா பாதிப்பு முடிந்து சகஜநிலைக்குப் பின்பே பல நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.
.
ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விமான சேவையை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்க உள்ளது.இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும். அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே ஏர் மொரீஷியஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.