மூடுபனியால் கோர விபத்து: கரும்பு டிராக்டரில் கார் மோதி 4 பேர் பலி!
26 Jan,2024
சாலையோரத்தில் இன்று அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த கரும்பு டிராக்டர் மீது வேகமாக வந்த கார் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பாகல்கோட் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகமாக உள்ளது. குளிர் மற்றும் மூனிபனி காரணமாக அதிக நேரங்களில் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நடைபெற்று வருகிறது. அப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு விபத்து இப்பகுதியில் நடைபெற்றுள்ளது.
பாகல்கோட் மாவட்டம், பாகலாகி தாலுகா தும்பரம்மிட்டி கிராஸ் அருகே, ஹூப்ளியின் சோலாப்பூர்- தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு நிரம்பிய டிராக்டர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது விஜயபுரா மாவட்டம் பாதாமியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஹொனகனஹள்ளிக்கு காரில் வேகமாக வந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த கார், கரும்பு டிராக்டரில் பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டர் அடியில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் காரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகல்கோட் மாவட்ட எஸ்.பி அமர்நாத் ரெட்டி மற்றும் பரகி போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். இந்த விபத்தில் ஹொனகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மல்லு பூஜாரி (24), கல்லப்ப கவுதகி (34), காமக்ஷி பதிகேரா (35), துக்காராம் தலேவாடா (30) ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூடுபனி காரணமாக சாலையில் நிறுத்தியிருந்த கரும்பு லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பரகி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.