கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு செல்ல ஆன்லைனில் ரூ.1000 வரை கட்டணம் - பயணிகள் புலம்பல்
25 Jan,2024
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டுக்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என்று நேற்று அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டமாக அறிவித்தார். இதற்கு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிளாம்பாக்கத்தில் தங்களுக்கு போதுபான பார்க்கிங் இல்லாததால், முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவார்கள் என்று அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு சென்று வரக்கூடிய ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையிலேயே இயக்கப்படுகின்றன. இதுவரை 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் அரசின் உத்தரவை ஏற்று கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 145-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பார்க்கிங் பேவிலும் , இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்தப்பட்டன.
மேலும், நேற்று மாலை கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களின் பயணிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்த பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லவும், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு வரவும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஆயிரம் ரூபாய் வரையில் கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புலம்புகின்றனர்ஸ
இதனிடையே, தென்மாவட்டம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும், ரெட்டில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.