கலக்கும் கைலாசா பிரதிநிதிகள் பாரீஸ் யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்பு!
25 Jan,2024
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கும் யுனெஸ்கோ கூட்டாண்மையில் உள்ள தொண்டு நிறுவனங்களின் இரண்டு நாள் மாநாட்டில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அந்த அமைப்புடன் அதிகாரபூர்வ கூட்டாண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் 15-வது சர்வதேச மன்ற இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இனவெறி மற்றும் பாகுபாட்டுக்கு எதிராக யுனெஸ்கோ மேற்கொள்ளும் பணிகளின் அடிப்படையில், மனநிலைகளை மாற்றியமைத்தல், சமூகங்களுக்குள் தேங்கி நிற்கும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது ஆகியவற்றுக்கு சிறந்த நடைமுறைகளை கண்டறிவது, உள்ளூர் அளவில் நடவடிக்கைக்கான உறுதியான பரிந்துரைகளை உருவாக்குவது ஆகியவை இம்மாநாட்டின் முயற்சியாகும்.
இதில் நித்யானந்தாவின் கைலாசாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கைலாசா பிராங்கோபோன் தலைவர் மா நித்ய வெங்கடேசனந்தா பங்கேற்றார். மாநாட்டில் அவர் சமர்ப்பித்த பரிந்துரையில், பிறப்பதற்கு முன்பே, குழந்தைகள் நிலையான குடும்பங்களில் வளர அனுமதிக்கும் வகையில், பெற்றோருக்குரிய கைலாசாவின் தீர்வுகளை வழங்கினார். “பெற்றோராக இருப்பது என்பது ஒரு குழந்தையின் உடல் நலம் மட்டுமல்லாமல், இப்போதும் எதிர்காலத்திலும் அவர்களின் அடையாளத்தை வடிவமைக்கும் ஆன்மிக மற்றும் கலாசார அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆழமான பயணமாகும்” என அவர் குறிப்பிட்டார்.
மா நித்ய வெங்கடேசனந்தா, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மாநாட்டின் தலைவரும்,யுனெஸ்கோ தொடர்புக் குழு தலைவருமான நிக் நியூலேண்ட், யுனெஸ்கோவின் சமூக மற்றும் மனித அறிவியல் துறையின் உரிமைகள் மற்றும் உரையாடல் பிரிவின் தலைவர் அன்னா மரியா மஜ்லோஃப், யுனெஸ்கோ சமூக மற்றும் மனித அறிவியல் துறை தலைவர் கரேன்ஸ் சர்லத் ஆகியோரையும் சந்தித்தார்.
அவர்களிடம் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா - பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரிக தேசத்தின் மறுமலர்ச்சி’ என்ற புத்தகத்தின் பிரதிகள் மற்றும் பல்வேறு பரிசுகளை மா நித்ய வெங்கடேசனந்தா வழங்கினார். உலகளாவிய பிரச்சினைகளில் யுனெஸ்கோவுடன் ஒத்துழைப்பதில் கைலாசா நாடு பெருமை கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்