ராமர் கோயில் விழா நாளில் பிறந்த சிசேரியன் குழந்தைகள்
24 Jan,2024
..
ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று அதற்கான முகூர்த்த நேர்த்தில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் - சீதா - ராம் ரஹீம் என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தை பெரும்பேறாக கருதும் மக்கள் மத்தியில், அன்றைய தினத்துக்கான முகூர்த்த பிரசவங்களை எதிர்கொள்ளும் போக்கு அதிகரித்து காணப்பட்டது. உத்தரப்பிரதேசம் மட்டுமன்றி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், நிறைமாத கர்ப்பிணிகள் முகூர்த்த பிரசவங்களை வலிய நாடினார்கள். அந்த நேரத்துக்காக காத்திருந்தோ அல்லது முன்கூட்டியோ சிசேரியன் பிரசவங்களையும் மேற்கொண்டனர்.
’அயோத்திக்கு ராமர் திரும்பிய நாள்’ என்ற அடையாளத்தில் அந்த தினத்தை பெரிதும் சிலாகிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவர்களும் முகூர்த்த பிரசவங்களை நிகழ்த்தினார்கள். கர்நாடகா தனியார் மருத்துவமனை ஒன்றில், இவ்வாறான கோரிக்கையின் கீழ் முகூர்த்த பிரசவம் வாயிலாக 50- க்கும் மேலான கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை பெற்றுள்ளனர். உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் இவ்வாறு 25 குழந்தைகள் பிறந்தது.
சிசேரியன் பிரசவங்கள் மட்டுமன்றி அன்றாடம் அரங்கேறும் வழக்கமான பிரசவங்களின் அடிப்படையில் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட தாய்மார்களும், ராமர் கோயில் குடமுழுக்கு நாளில் தங்கள் குழந்தை பிறந்ததை பாக்கியமாக கருதுகின்றனர். இவ்வாறு பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சொல்லி வைத்தார்போன்று, ஆண் குழந்தைகளுக்கு ராமரின் பெயர்களையும், பெண் குழந்தைகளுக்கு சீதையின் பெயர்களையும் சூட்டியுள்ளனர்.
ஆண் குழந்தைகளுக்கு ராம், ஸ்ரீராம், ராகவ், ராகவேந்திரா, ரகு, மற்றும் ராமேந்திரா என விதவிதமான ராமரின் பெயர்களை சூட்டி மகிழ்ந்துள்ளனர். இதே போன்று பெண் குழந்தைகளுக்கு ஜானகி மற்றும் சீதா என்று பெயரிட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் இஸ்லாமிய குடும்பம் ஒன்றில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்து - முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் குழந்தையின் பாட்டி ஹசீனா பானு இந்த பெயரை தேர்ந்தெடுத்ததாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.