வௌிநாட்டு மாணவர்கள் கனடாவில் 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி
24 Jan,2024
ஒட்டாவா: வௌிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்த கனடா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2024 முதல் கனடாவுக்கு படிக்க செல்ல விண்ணப்பம் செய்வோர் தங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.12.7 லட்சம் இருப்பு வைத்துள்ளதை காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை முன்பு ரூ.6.14 லட்சமாக இருந்தது. இந்நிலையில் வௌிநாட்டு மாணவர்கள் கனடாவில் 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் மார்க் மில்லர், “அதிக கட்டணம் வசூலித்து, போதிய வசதிகளற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது ஏற்று கொள்ள முடியாதது. மேலும் கனடாவில் வௌிநாட்டினர் வரவு அதிகரித்துள்ளதால் தங்குமிடங்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சர்வதேச மாணவர்களுக்கான விசா 35 சதவீதம் குறைக்கப்படும். வௌிநாட்டு மாணவர்கள் 2 ஆண்டுகள் மட்டுமே கனடாவில் தங்க அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு 3,64,000 சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். கனடா அரசின் இந்த அறிவிப்பால் அந்நாட்டுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.