அதிர்ந்த ஆதம்பாக்கம் -ரயில் பாலம் சரிந்து விழுந்ததால்
19 Jan,2024
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் நிலநடுக்கம் வந்ததைப் போல உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் நேற்று மாலை 6.15 மணியளவில் இரு தூண்களுக்கு இடையே 40 மீட்டர் நீளத்திலான கான்கிரீட் இணைப்பை பொருத்தும் பணி நடைபெற்ற போது, திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போல உணர்ந்ததால் வீடுகளில் இருந்து அனைவரும் வெளியே வந்துவிட்டதாக அப்பகுதிம் மக்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த போது பாலத்தின் கீழ் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் பால பணியில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தியில், வேளச்சேரி, புனித தோமையார் மலை இடையே கூடுதலாக பாதை அமைக்கும் பணியின்போது, கான்கிரீட்டை பொருத்தும் பணி நடைபெற்றதாகவும், அப்போது கான்கிரீட் தவறிவிழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட்டை மேலே கொண்டுசெல்லும் கருவியில் ஏற்பட்ட பழுதுகாரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றுவதாகவும் ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வுசெய்தார். அவரிடம் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.