சாலை பள்ளங்களில் தடுமாறிய ஆம்புலன்ஸ் வாகனத்தால், அதில் கொண்டு செல்லப்பட்ட சடலத்துக்கு உயிர் கிடைத்த அதிசயம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.
அவசர சேவைக்கான ஆம்புலன்ஸ் ஓர் உயிர் காக்கும் வாகனம் என்பதை அறிவோம். ஆனால், இறந்த சடலத்துக்கும் ஆம்புலன்ஸ் உயிர் கொடுத்த வினோத சம்பவம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு நபர், சடலமாக ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டபோது திடீரென உயிர் பிழைத்தார். 80 வயதாகும் தர்ஷன் சிங் பிரார் என்ற முதியவரை ஆம்புலன்ஸ் வாகனமும், சாலையில் நிறைந்திருந்த பள்ளங்களும் எமனிடமிருந்து காத்துள்ளன.
தர்ஷன் சிங் பிரார் வயோதிகம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் சில தினங்களுக்கு முன்னதாக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, 4 நாட்கள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து அவரது சடலத்தை ஏற்றிக்கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று, சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள நைசிங் கிராமத்தை நோக்கி விரைந்தது. அங்கேதான் தாத்தாவின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. வயதில் மூத்தவர் என்பதால் சொந்தபந்தங்கள் திரளாக கூட ஆரம்பித்தனர். நூற்றுக்கும் மேலான உறவினர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவை ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. தகனம் செய்வதற்கான விறகும் தயாரானது.
ஆனால் ஆம்புலன்ஸ் வழித்தடத்தில் எதிர்பாரா சம்பவம் நடந்தேறியது. தண்ட் என்ற கிராமத்தை கடக்கையில், சாலையில் நிறைந்திருந்த குண்டு குழிகளில் வாகனம் விழுந்து எழுந்து சென்றது. இதில் வாகனத்தில் பயணித்தவர்களும் தடுமாறிப்போனார்கள். தாத்தாவின் சடலமும் தூக்கிப்போட்டது. அருகிலிருந்த பேரன் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். ஆனால் அதன் பிறகு ஆம்புலன்ஸ் பள்ளங்கள் இல்லாத சாலையில் விரைந்தபோதும், தாத்தா உடல் தூக்கிப்போடவே பேரன் அலறினார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தாத்தாவின் ‘சடலத்தை’ பரிசோதித்தனர். இதயத்துடிப்பு இருப்பதை அடையாளம் கண்டதும் அருகிலுள்ள மருத்துவனைக்கு ஆம்புலன்ஸை விரட்டினர். அங்கே தாத்தா பிராருக்கு உயிர் இருப்பதை மருத்துவர்களும் உறுதி செய்தனர். உடனே மேல்சிகிச்சைக்காக கர்னாலில் உள்ள ராவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாத்தா தற்போது நலமுடன் உள்ளார்.
“நோயாளி எங்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவர் சுவாசித்துக் கொண்டிருந்தார், மேலும் அவருக்கு இரத்த அழுத்தமும், நாடித்துடிப்பும் சீராக இருந்தது. மற்ற மருத்துவமனையில் என்ன நடந்தது, அது தொழில்நுட்பப் பிழையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது எங்களுக்குத் தெரியாது ”என்று ராவல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நேத்ரபால் விளக்கமளித்துள்ளார்.
பிரார் இறுதிச்சடங்குக்கு வந்த உறவினர்கள் அனைவரும், அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்துகொள்ள கர்னால் மருத்துவமனையை நோக்கி படையெடுத்துள்ளனர்.