புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது,படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை
15 Jan,2024
நடுக்கடலில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை 3 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மிரட்டுவது, தாக்குவது, அடித்து விரட்டுவது போன்ற செயல்கள் தொடர்கதையாகி உள்ளது. மேலும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீனவர்களை கைது செய்து படகுகளை சிறைபிடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களுக்கும் அவ்வப்போது நடந்து வருகிறது.
தமிழகமே பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாராகும் இந்த நேரத்திலும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் இந்திய கடல் எல்லையில் இன்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 13 மீனவர்களையும், 3 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். மேலும் மீனவர்களை கைது செய்த கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் காங்கசேன் பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மீனவ கிராமங்களில் சோகத்தை உருவாக்கியுள்ளது.