மாலத்தீவுக்கு எதிரான மல்லுக்கட்டு... லட்சத்தீவுக்கு புதிய விமான நிலையம் கட்டமைக்க முடிவு
11 Jan,2024
மாலத்தீவுடனான மோதல்களுக்கு மத்தியில், லட்சத்தீவுகளின் மினிகாயில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா அதிரடி முடிவெடுத்துள்ளது.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்துவது ஆகியவை இந்த விமான நிலையத்தை கட்டமைப்பதன் முதன்மையான நோக்கங்களாகும்.
இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துகளால், இந்தியா - மாலத்தீவு இடையே ராஜீய அளவிலான உரசல் எழுந்துள்ளது. இதன் மத்தியில், இந்தியாவின் லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களுக்கு இடமளிக்கும் புதிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லட்சத்தீவுகளுக்கு என ஏற்கனவே அகட்டி தீவில் ஒரு விமான ஓடுதளம் உள்ளது. இதற்கு அப்பால் மினிகாயில் உருவாகும் விமான நிலையம் போர் விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமானநிலையமாக உருவெடுக்க இருக்கிறது.
இதற்கு முன்பாகவும் மினிகாய் தீவில் புதிய விமானநிலையத்தை உருவாக்குவதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டன. ஆனால் யோசனை அளவோடு அவை தேங்கிப்போயின. முந்தைய மினிகாய் விமானநிலைய ஏற்பாடு இந்திய கடலோர காவல்படையால் வழங்கப்பட்டது. தற்போதைய புதிய முன்னெடுப்பு இந்திய விமானப்படையால் வழிநடத்தப்பட இருக்கின்றன.
இந்த முடிவு லட்சத்தீவுகளுக்கான சுற்றுலாவை மேம்படுத்துவதையும், விமானநிலையத்தின் வளர்ச்சியுடன் அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கான ராணுவ ரீதியிலான கண்காணிப்புக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், பிராந்திய சுற்றுலாவைத் தூண்டுவதோடு, பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறனையும் மேம்படுத்தும். தற்போதைய அகட்டி தீவின் ஒற்றை விமான ஓடுதளம், பயணிகள் முதல் சரக்கு மற்றும் ராணுவ உபயோகம் வரை பல்வேறு வகையான விமானங்களை கட்டுப்படுத்துகிறது.
திட்டப்படி மினிகாய் விமான நிலையம் நடைமுறைக்கு வரும்போது, லட்சத்தீவுகள் மேலும் லட்சணம் கூடக் காத்திருக்கின்றன.