இந்தியா இனியும் பொறுத்துக்கொள்ளாது’ மாலத்தீவு விவகாரத்தில் லட்சத்தீவு நிர்வாகி சீற்றம்
09 Jan,2024
மாலத்தீவு விடுக்கும் அவமதிப்பை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என லட்சத்தீவு நிர்வாகியான பிரபுல் கோடா படேல் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு விவகாரத்தில் இந்தியர்களின் கண்டனம் அதிகரித்து வருகிறது. சீன ஆதரவு ஆட்சியாளரான முகமது முய்ஸு தலைமையிலான ஆட்சி அங்கே அமைந்தது முதல் இரு நாடுகளின் உறவு விரிசல் விழுந்திருக்கிறது. மாலத்தீவின் பாதுகாப்பு, வருமானம், செழிப்பு உள்ளிட்டவற்றில் நீண்ட காலமாக இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. வருடந்தோறும் மாலத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலப்பயணிகளின் எண்ணிக்கையிலும் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது.
இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு மேற்கொண்ட பயணம் மற்றும் அங்கு எடுத்துக்கொண்ட படங்கள் இணையத்தை தெறிக்க விட்டன. மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவுகளின் இயற்கை வனப்பையும், சிறப்பையும் வெளியுலகுக்கு பறைசாற்றும் விதமாக அவை அமைந்திருந்தன. இவை தொடர்பாக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் பதிவிட்டிருந்தது சர்ச்சையை உருவாக்கியது. உடனடியாக அந்த பதிவுகள் நீக்கப்பட்டன. எனினும் இந்த விவகாரத்தில் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் அவர்களின் பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பலதரப்பு விவாதங்கள் அதிகரித்து வருவதன் மத்தியில், லட்சத்தீவுகளின் நிர்வாகியான பிரபுல் படேல் முதல் முறையாக தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளார். ’இந்திய பிரதமர் மோடியை விமர்சிக்கும் மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துகள், இந்தியாவின் கண்ணியத்துக்கு சவால் விடுவதாக’ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரபுல் படேல் தெரிவித்திருந்தார். லட்சத்தீவுகளுக்கு ஆதரவாக நின்ற பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘அவமதிப்பை ஒருபோதும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது. முழு நாடும் பிரதமருடன் நின்று ஒற்றுமையைக் காட்டியது" என்று பெருமிதம் காட்டியிருக்கிறார்.
மாலத்தீவு மக்களை லட்சத்தீவுக்கு வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, "எவராயினும் அவர்களை வரவேற்பது நமது நாட்டின் பாரம்பரியம். நமது நிலப்பரப்பைக் காண வருகை தருவோர் அதனால் மகிழ்ச்சி அடைந்தால், அது நம்மையும் மகிழ்விக்கும். இதில் தவறு ஏதும் இல்லை” என்றும் பிரபுல் படேல் தெரிவித்தார். முகமது முய்ஸு விரைவில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதை அடுத்து, மாலத்தீவு ஆட்சியாளர்கள் மத்தியில் சீன ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பிலான சர்ச்சை தொடரும் போக்கை உறுதி செய்துள்ளன.