ஃபாரின் ரேஞ்சுக்கு, 12 மாடி கட்டிடத்துக்குள் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சென்னை மக்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
மெட்ரோ ரயில் பெரிய பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்துக்குள் புகுந்து செல்வது, வணிக வளாகங்களுக்குள் நுழைந்து வருவது போன்ற காட்சிகளை நாம் சினிமாவில் மட்டுமே இதுவரை பார்த்திருப்போம்.
ஆனால் உண்மையில் சீனா போன்ற நாடுகளில் மெட்ரோ ரயில் சேவை பல இடங்களில் அப்படித்தான் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற காட்சியை, இனி நம்மாலும் பார்க்க முடியும். ஏன்? நாமே கூட பயணம் செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
காரணம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்னை திருமங்கலத்திலும் இதுபோன்ற சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதாவது, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் திருமங்கலம் பகுதியில் ஒரு 12 மாடி கட்டிடத்தின் 3வது மாடியில், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு, அதில் ரயில்கள் நின்று செல்லும் விதமாக ரயில் நிலையமும் அமைக்கப்பட உள்ளது.
ரயில் நிலையம் அமைக்கப்படும் பகுதியை மேம்படுத்தவும், அருகில் மக்கள் வசிப்பதை அதிகரிக்கும் விதமாகவும், ரயில் நிலையம் அமைப்பதைவிட, அடுக்குமாடி கட்டிடத்தில் ரயில் நிலையம் அமைத்து, மற்ற தளங்களை வாடகைக்கு விடுவது வருவாய்க்கும் சரியாக இருக்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கோயம்பேடு, திருமயிலை பகுதிகளில் ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் 12 மாடி கட்டிடத்தில் அமையும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பாதை உருவாக்கப்பட்டபோது அங்கு கட்டிடங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் விதமாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், அந்தவகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 இடங்களில், அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஏதுவாக தற்போது திருமங்கலத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 3 வீடுகள் மட்டும் ரயில் பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மட்டும் அமைப்பதைவிடவும் அடுக்குமாடி கட்டிடங்களை அமைத்து, அதனை வணிக நிறுவனங்களாக மாற்றினால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு செய்த செலவை ஈடு செய்ய முடியும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருதுவதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.