கனடாவில் கோரவிபத்து, நாடுகடத்தப்படும் இந்திய இளைஞர்
17 Dec,2023
கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கோரவிபத்தில் 16 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இளைஞர் ஒருவர் அந்நாட்டில் தங்கும் உரிமையை இழந்துள்ள் நிலையில் நாடு கடத்தப்படவுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கிரத் சிங் சித்து என்ற இளைஞர் செலுத்திய வாகனம் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் சித்து, ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு பணியில் சேர்ந்தார் என்பது, அவர் அப்போதுதான் ட்ரக் ஓட்ட தொடங்கியதும் தெரியவந்தது.
விபத்தை ஏற்படுத்தி 16 பேரை கொன்ற வழக்கில் சித்துவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சித்துவுக்கு பரோல் வழங்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம் பரிந்துரைத்தது.
இதுதொடர்பான வழக்கில் நீதிபதி சித்துவின் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டார். சித்துவின் வழக்கறிஞர் எவ்வளவோ போராடியும், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. சித்து மீது இதற்கு முன்பு எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார் அவரது வழக்கறிஞர்.
ஆனால் கனடாவின் நிரந்தர குடியிருப்பாளரான சித்துவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்திய வம்சாவளியான சித்து கனடாவிலேயே தங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த நிலையில், விபத்தில் தங்களின் உறவுகளை இழந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் சித்து நாடு கடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கனடா எல்லை சேவைகள் நிறுவனம் அவரை கடத்த வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.