குடியரசு தின விழா விருந்தினர் அழைப்பை நிராகரித்தாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?
13 Dec,2023
ஜனவரியில் நடைபெற உள்ள இந்தியாவின் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியான சூழலில், அது தொடர்பாக அமெரிக்க அதிபர் தரப்பிலான நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2024, ஜனவரியில் நடைபெறும் குடியரசு தினவிழாவிற்கு தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு, முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி உறுதி செய்திருந்தார். ’ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவுக்கு தலைமை விருந்தினராக பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பரில் அழைப்பு விடுத்ததாக’ எரிக் கூறினார்.
ஜனவரியில் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பங்கேற்க வரும்போது, அப்படியே குடியரசு தின விழாவிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தற்போது ஜோ பைடன் வருகை தொடர்பாக எதிர்மறையான தகவல் கிடைத்திருப்பதை அடுத்து, அடுத்த மாதம் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாட்டின் தேதிகளை மாற்றுவது குறித்தும் இந்திய தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு பரிசீலனையில் உள்ள தேதிகள் அனைத்தும், குவாட் கூட்டணியின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் ஒருமித்த முடிவுக்கு வர இயலாததில், திருத்தப்பட்ட தேதிகளை இந்தியா தேடி வருகிறது. இதனால் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு 2024-ம் ஆண்டின் பிற்பகுதிக்கு தள்ளிப்போகும் என்றும் தெரிய வருகிறது.
குவாட் மாநாடுக்கான தேதியை விட, 2024 குடியரசு தினத்துக்கு எவரை அழைப்பது என்ற நெருக்கடி இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இன்னொரு உலகத் தலைவரை அழைப்பதில் இந்தியாவுக்கு தடுமாற்றம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் மறுப்பு நிராகரித்த சூழலில், அந்த இடத்தை இன்னொரு உலக நாட்டின் தலைவரால் நிரப்புவதில் சங்கடங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் மிக முக்கியமான கவுரவங்களில் ஒன்றான குடியரசு தினத்தில், முதன்மை விருந்தினராக வருவதற்கான அழைப்பு அதன் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, 2021 மற்றும் 2022 குடியரசு தின விழாக்களில் தலைமை விருந்தினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு(2023), எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். ஆனால் 2024 குடியரசு தின விழாவுக்கான தலைமை விருந்தினரை தீர்மானிப்பதில் புதிய இழுபறி எழுந்துள்ளது.