அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் மோசடி ..
09 Dec,2023
,
விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர் – கட்ச் அதிவேக வீதியில் நுழைவாயில் உள்ளது.
இந்த நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இந்த தொழிற்சாலையை போலி நுழைவாயிலுக்காக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, தேசிய அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போன்று போலியான நுழைவாயில் அமைத்தனர்.
மேலும், அதிவேக வீதி அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, ஒரு துணைச்சாலை அமைத்தனர். இந்த வீதி வழியாக அதிவேக வீதியில் செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
வர்கசியா நுழைவாயில் வசூல் செய்யும் பணத்தை விட இந்த போலி நுழைவாயில் 50 சதவீதம் குறைந்த கட்டணத்தையே வசூலித்துள்ளது. இதனால் கன ரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் செலுத்துகிற சாரதிகள் போலி நுழைவாயில் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. ஏனென்றால், தங்களுக்கு நுழைவாயில் அனுமதிக் கட்டணத்தில் 50 சதவீதம் இலாபம் கிடைப்பதால் அந்த வழியையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த போலி நுழைவாயில் செயற்பட்டு கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் உரிய இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது போலி நுழைவாயில் செயற்படுகின்றமை தொடர்பில் தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட பலர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.