இயற்கை பேரிடர் காலத்தில் சென்னையில் விமானம் இறங்க முடியாதபோது திருச்சி இருக்க பெங்களூரு எதற்கு?
09 Dec,2023
திருச்சி: இயற்கை பேரிடர் காலங்களில் சென்னை விமானநிலையத்தில் விமானங்களை கையாள முடியாதபோது, பெங்களூருவுக்குப் பதிலாக, திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தும் வகையில் ஓடுதள விரிவாக்கத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக டிச.4-ம் தேதி சென்னையில் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, சர்வதேச விமானநிலைய செயல்பாடும் முற்றிலும் முடங்கியது. புயல், மழை, மூடுபனி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் சென்னை விமானநிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.இதுபோன்ற நேரங்களில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தாமல், கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்துக்கு விமானங்களை அனுப்பி வைப்பது திருச்சி விமானநிலைய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டு 12 ஆண்டுகள் ஆகியும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என விமானநிலைய அதிகாரிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதுதொடர்பாக விமானநிலைய ஆர்வலர் உபைதுல்லா கூறும்போது, ‘‘சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்படும்போது, திருச்சிக்கு திருப்பி விடப்பட்டால், இங்கிருந்து பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதில் செல்ல வசதியாக இருக்கும். ஆனால், போயிங் ரக பெரிய விமானங்கள் இங்கு இறங்க முடியாது என்பதால், விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. எனவே, இந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக திருச்சி விமானநிலைய அதிகாரி ஒருவர் கூறியது: திருச்சி விமான நிலைய ஓடுதளத்தை 2 கட்டங்களாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது. 2-ம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, ஓடுதளத்தை தற்போதுள்ள 2,480 மீட்டரிலிருந்து 3,800 மீட்டராக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான இடத்தை நில உரிமையாளர்களிடம் பெற்று தருமாறு விமானநிலைய ஆணைய குழுமம் தமிழக அரசிடம் கோரியது. தற்போதைய விரிவாக்கத்துக்கு 510 ஏக்கர்நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்திருந்தும், இதுவரை 40 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், மத்திய அரசின் பாதுகாப்பு துறையிடமிருந்து 167 ஏக்கர் பெறப்பட்டுள்ளது. எனவே, சென்னை விமானநிலையத்துக்கு மாற்றாக திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என்றார்.